Sunday, May 5, 2019

பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள், இந்தியாவில் பயிற்சி பெறவில்லை


இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள், இந்தியாவில் பயிற்சி பெறவில்லை என இந்திய பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளதாக, இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் தற்கொலை குண்டு தாக்குதல்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இந்தியாவில் பயிற்சி பெற்று இருக்கலாம் என இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக அண்மையில், பிபிசி செய்தி சேவைக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார்.

பயங்கரவாதிகள் இலங்கையில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக, சிலர் காஷ்மீர், கேரளா, பெங்களூர் ஆகிய இடங்களுக்கு சென்றுள்ளனர் எனவும் அது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், இலங்கையில் தாக்குதல் நடத்தியவர்கள் இந்தியாவில் பயிற்சி பெற்றமைக்கான எந்த ஆதாரமும் இல்லை என இந்திய பாதுகாப்பு முகாமின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலை தொடர்ந்து, காஷ்மீருக்கு இந்த ஆண்டில் வருகை தந்த இலங்கையை சேர்ந்த 12 பேர்களின் ஆவணங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டது.

அதில் பயங்கரவாதிகள் எவரும் வந்தமைக்கான ஆதாரங்கள் இல்லை என பாதுகாப்பு முகாமின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், பயங்கரவாதிகள் வேறு பெயர்களில் இந்தியா வந்து இருக்க வாய்ப்பு உள்ளதால், இலங்கை அரசாங்கம் உரிய ஆதாரங்களை வழங்கினால் முறையான விசாரணை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

Author: verified_user

0 comments: