Tuesday, May 7, 2019

தலவாக்கலையில் மோதல்..! - ஆறு பேர் கைது!


தலவாக்கலை நகரில் நேற்று இரவு முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு இடையில் இடம்பெற்று மோதலை அடுத்து ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.


இரண்டு தினங்களுக்கு முன்னர் ஒரே இடத்தில் உள்ள முச்சக்கர வண்டி சாரதிகள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட முறுகலை மையப்படுத்தி, நேற்றையதினம் குழு மோதல் இடம்பெற்றுள்ளது.


எனினும் பொதுமக்கள் வழங்கிய உடனடி தகவலை அடுத்து அவர்களை அமைதிப்படுத்திய காவற்துறையினர் ஆறுபேரை கைது செய்திருப்பதுடன், இந்த பிரச்சினை தணித்துள்ளதாக தலவாக்கலை காவற்துறைப் பொறுப்பதிகாரி எமது செய்தி சேவையிடம் தெரிவித்தார்.


இதேவேளை , வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கொழும்பு - கறுவாத்தோட்டம் பகுதியில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட அவர்கள் இருவரும் சகோதரர்கள் என்று காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கைதானவர்களிடம் இருந்து சந்தேகத்துக்கு இடமான எந்த பொருட்களும் மீட்கப்படவில்லை எனினும், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இதேவேளை, தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக செயற்பட்ட மொஹமட் பாருக் மொஹமட் பவாஸ் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


அவர் இன்றைய தினம் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.


இதன்போது, அவரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


இதற்கிடையில், கொழும்பு – கோட்டை ரெலிகொம் நிறுவனத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து ஒன்றில் பொதுமக்களை அச்சத்துக்குள்ளாகும் நோக்கில் பொதி ஒன்று இட்டுச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


பேருந்து ஒன்றில் சந்தேகத்துக்கிடமான பொதி ஒன்று இருப்பதாக பொதுமக்கள் இன்று காலை காவற்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.


இதற்கமைய குறித்த பகுதிக்கு விரைந்த காவற்துறையினர், அந்த பொதியை சோதனைக்கு உட்படுத்தினர்.


எனினும் அந்த பொதியில் எந்தவித பொருட்களும் இருக்கவில்லை என காவற்துறை தெரிவித்துள்ளது.


பொதுமக்களை அச்சமடைய செய்யும் நோக்கில் குறித்த பொதியை யாரேனும் வேண்டும் என்றே விட்டுச் சென்றிருக்க கூடும் என காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள காவற்துறையினர் இதற்காக அருகில் உள்ள வர்த்தகநிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சீ.சீ.டி.வி காணொளிகளை பெற்றுக் கொள்ளவுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.


பாதுகாப்பற்ற வகையில் பேருந்தை வீதியோரம் நிறுத்திச் சென்றமை தொடர்பில் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதனிடையே, நேற்றைய தினம் ஐந்துலாம்பு சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளி ஒன்று சந்தேகத்துக்கு இடமான பொருள் ஒன்று இருப்பதாக தகவல்கள் வெளியாகின.


இது தொடர்பில் எமது செய்தி சேவை காவற்துறை ஊடக பேச்சாளர் காவற்றை அத்தியட்சகர் ருவண் குணசேகரவை தொடர்பு கொண்டு வினவியது.


அதற்கு பதிலளித்த அவர், சந்தேகத்துக்கு இடமான பொருட்கள் இருப்பதாக காவற்துறையினரை ஏமாற்ற முயற்சிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.


இதேவேளை, ஹட்டன் தனியார் பேருந்து தரிப்படத்திற்கு அருகில் சந்தேகத்துக்கு இடமான பொதி ஒன்றை காவற்துறையினர் சோதனைக்கு உட்படுத்தினர்.


இதன்போது, உத்தியோகபூர்வ இராணுவ சீருடை மற்றும் தலைகவசம் என்பன மீட்கப்பட்டுள்ளன.


இதனிடையே, நாவலப்பிட்டி - ஹப்புகஸ்தலாவ பகுதியில் காவற்துறை விஷேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போது, தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பிற்கு சொந்தமானதாக கருதப்படும் 15 இறுவட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன.


இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல்களை அடுத்து மூடப்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் ஆராதனைகளுக்காக 16 நாட்களின் பின்னர் இன்று திறக்கப்பட்டதாக அதன் கட்டுப்பாட்டாளர் அருட்தந்தை கே.ஏ.ஜூட் ராஜ் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

Author: verified_user

0 comments: