Tuesday, June 4, 2019

ஜம்இய்யதுல் உலமாவின், மேலான கவனத்திற்கு...!

நேற்று ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இப்தார் நிகழ்ச்சியில்;; கலந்து கொள்ளச் சென்றிருந்த ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகள் குழு முஸ்லிம்களின் பாதுகாப்பு, அப்பாவிக் கைதிகளின் விடுதலை, முஸ்லிம் பெண்களது ஆடை ஆகியன தொடர்பாக வரையப்பட்ட கடிதம் ஒன்றை ஜனாதிபதியிடம் கையளித்ததாகவும், ஜனாதிபதியின் சபையில் ஜம்இய்யத்துல் உலமா தலைவர் சமூகத்தின் கௌரவத்தை எடுத்துக் காட்டியமையும் ஊடகங்கள் வாயிலாக அறியமுடிந்தது. அல்லாஹ் ஜம்இய்யத் உலமா தலைவருக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் அருள் புரியவேண்டும்.

இங்கு நான் எழுதப்போகின்ற விடயம் ஜம்இய்யத்துல் உலமாவை விமர்சிப்பதற்காக அல்ல. ஓர் ஆலோசனையை முன்வைப்பதற்காக மட்டுமே.

நான் ஜம்இய்யாவிடம் மிகத் தாழ்மையாக முன்வைக்கின்ற ஆலோசனை யாதெனில் முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் ஜம்இய்யா தனது கருத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்பதே.

ஜனாதிபதிக்கு வழங்கிய கடிதத்தில் முஸ்லிம் பெண்களின் ஆடைதொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு கோறியிருந்தமை ஜம்இய்யா ‘பெண்கள் முகம் மறைக்க வேண்டும்’ என்ற விடயத்தில் இன்னும் பிடிவாதமாக இருப்பதை சுட்டிக்காட்டுவதாகவே உள்ளது, ஜம்இய்யதுல் உலமா இஸ்லாத்தையும் எல்லா முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் அமைப்பு என்றவகையில் குறித்த விடயத்தில் பிடிவாதத்தைத் தளர்த்த வேண்டும் என்பதே எனது ஆலோசனையாகும். அதற்கான நியாயங்கள் பல

1. அரசாங்கம் முகத்தை மறைத்தலை மாத்திரமே தடைசெய்தது. ஆனால் இனவாதிகளோ அபாயா, இஸ்காப் ஆகியவற்றைக் கூட எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடாத்தினர். அதனால் முஸ்லிம் பெண்கள் பல்வேறு இடைஞ்சல்களுக்கு உள்ளாகினர். இவ்வாறான நிலையில் நாம் முகம் மறைத்தலுக்கான அனுமதியைப் பெற்று, வெற்றி பெற்றோம் என்ற மகிழ்ச்சியல் அதை நடைமுறைப் படுத்தும் போது பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரலாம்.

2. முகம் மறைக்கும் விடயத்தில் உலமாக்கள் மத்தியல் நிறையக் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஷாபி மத்ஹபில் கூட முகம் மறைத்தல் கட்டாயமல்ல. இந்நிலையில் ஜம்இய்யதுல் உலமா முகம் மறைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருப்பது பொருத்தமானதல்ல.

3. முகம் மறைத்தல் பெண்ணின் உரிமையோடு தொடர்பான விடயம். எனவே அதைப் பெண்கள் பேசட்டும். ஜம்இய்யதுல் உலமாவோ அல்லது ஏனைய ஆண்களோ அதைப் பற்றிப் பேசும் போது இஸ்லாம் பெண்ணுரிமைக்கு எதிரானது என்ற விமர்சனத்திற்கு ஆதாரமாய் அமைந்துவிடும்

4. பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை விட ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ‘பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுங்கள்;’ என்ற அல்குர்ஆனியக் கட்டளைக்கு முன்னுரிமை வழங்குதல் இஸ்லாம் பற்றிய நல்லெண்ணத்தை ஏற்படுத்தும்.

5. முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாத்தை வெறுப்பதற்கு பெண்களின் முகத்திரையும் ஒரு காரணம் என்பதை நாம் அறிவோம். இந்நிலையில் முகத்திரை முக்கியமா? இஸ்லாம் பற்றிய நல்லெண்ணத்தை ஏற்படுத்தல் முக்கியமா? பொருத்தமானதைத் தெரிவுசெய்வதில் ஜம்இய்யா அதி;க கவனம் செலுத்த வேண்டும்.

6. முகத்தை மூடும் சில பெண்கள் பொது இடங்களில் வெளிப்படுத்தும் நடத்தைக் கோளம் முகத்தை மறைப்பதற்காகக் கூறப்படும் தாத்பரியத்திற்கு முரணாக இருத்தல்

7. தமது முகத்தை அல்லது தமது பெண்களின் முகத்தை எந்த ஆணும் பார்க்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ள குறைந்த வீதத்தினருக்காக போராடுவது முழு சமூகத்தையும் பிரதிநிதிதுவப்படுத்தும் ஜம்இய்யாவுக்குப் பொருத்தமானதா?

8. ஜம்இய்யா முகத்திரைக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கும் போது, முஸ்லிம் அல்லாத அரசியல் வாதிகள் கூட முகத்திரை விவகாரம் மூலம் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கலாம். அதனால் ஏற்படும் வாதப் பிரதிவாதங்களால் முகத்திரை முஸ்லிம்களின் அவமானச் சின்னமாக மாறலாம்.

9. ஜம்இய்யதுல் உலமா முகத்திரையை வலியுறுத்தும் போது தொழில் புரியும் சில பெண்களும் அதை தமக்குக் கட்டாயப்படுத்திக் கொள்கின்றனர். இது பல சந்தர்ப்பங்களில் அவர்களது தொழிலுக்கு இடைஞ்சலாகி கடும் விமர்சனத்திற்கு ஆளாகின்றனர்.

10. சில முஸ்லிம் பெண்கள் சுயநலனுக்காகவும் குறுகிய இலாபத்திற்காகவும் முகத்திரையைப் பயன்படுத்துவதனாலும், சில சமூகவிரோதிகள் முகத்திரை அணிந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவதனாலும் முகத்திரைக்கிருந்த நம்பிக்கையும் நல்லபிப்பிராயமும் மக்கள் மத்தியில் இல்லாமல் போய்விட்டது.

11. அனைத்துக்கும் மேலாக, முகம் மூடுவதை அல்லாஹ் கட்டாயப்படுத்தாத நிலையில் ஒருசாராரின் விருப்பத்திற்கமைய அதைக் கட்டாய நிலைக்குக் கொண்டுவருவது அல்லாஹ்வின் அதிகாரத்தில் கைவித்த குற்றத்திற்கு, அவன் இலகுவாக்கியதை கஷ்டப்படுத்திய குற்றத்திற்கு ஆளாக்க மாட்டாதா?

ஜம்இய்யதுல் உலமா முகம் மூடுவதைக் கட்டாயப்படுத்தவில்லை என்றிருப்பின் இலங்கையில் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் என்பதையும் தற்போது நாட்டில் உள்ள நிலைமைகளையும் கவனத்திற்கொண்டு இனிமேல் ஜம்இய்யதுல் உலமா முகத்திரை விவகாரத்தை பேசாமல் இருப்பதே ஜம்இய்யாவுக்கும் சிறந்தது, முஸ்லிம்களுக்கும் சிறந்தது என்பதே எனது பணிவான அபிப்பிராயமாகும்.

அஷ்செய்க் எம்.எம். பஸ்லுர்ரஹ்மான் Naleemi, B.A., SLTS

Author: verified_user

0 comments: