Monday, June 3, 2019

ஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திகதி முதற்தடவையாக சென்றுள்ளனர்.
ஜம்மியத்துல் உலமா தலைவர் முப்தி றிஸ்வி தலைமையில், ஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக சென்ற உலமா சபை பிரதிநிதிகள் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றையும் ஜனாதிபதியின் கரங்களில் நேரடியாக ஒப்படைத்தனர்.

அந்தக்  கடிதத்தில் முஸ்லிம்களின் பாதுகாப்பு, சிறைகளில் உள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்தல், முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் ஆகிய 3 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்தக் கோரிக்கைகளை ஏற்று ஜனாதிபதி உரிய பதிலை வழங்கினால் தாம் இன்று திங்கட்கிழமை மாலை ஜனாதிபதியின் இப்தாரில் பங்குகொள்ள முடியுமென சுட்டிக்காட்டியுள்ளனர்.

தாம் இக்கோரிக்கைகள் பற்றி, சாதகமாக பரிசீலிப்பதாக ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியுள்ளார்.

இதையடுத்து இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இப்தார் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதில் உலமா சபை பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். இதன்போது உலமா சபை தனக்கு அனுப்பிய கடிதத்தையும் ஜனாதிபதி வாசித்துக் காட்டியுள்ளார்.

மேலும் பதில் பொலிஸ்மா அதிபரை உடனடியாக தொடர்புகொண்டு, அப்பாவி முஸ்லிம்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும்படியும், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு முஸ்லிம் பெண்களின் உத்தியோபுர்வ ஆடை விவகாரத்தில் உரிய நடைமுறைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இனவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளவும் வெறுப்புட்டும் பேச்சுக்களை கட்டுப்படுத்தவும் இணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதேவேளை இதுவரை கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள், விடுதலை செய்யப்பட்டதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா -  ஜனாதிபதி சந்திப்பு குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டியிருப்பதாக மேலும் அறிய வருகிறது.

Author: verified_user

0 comments: