பாகிஸ்தானில் popcorn வியாபாரி ஒருவர் விமானம் தயாரித்தமை உலகளவில் பேசப்படும் ஒரு நல்ல முயற்சியாக பார்க்கப்படுகின்றது.
அந்த நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தபூர் கிராமத்தை சேர்ந்த 32 வயதான முகமது பயாஸ் என்பவரே இந்தச் செயற்பாட்டை செய்துள்ளார். பயாஸுக்கு விமானப் படையில் சேர வேண்டும் என்ற ஆசை சிறுவயது முதற்கொண்டு இருந்து வந்துள்ளது. ஆனால் அவரால் சின்ன வயதிலே தந்தையை பறிகொடுத்த காரணத்தினால், தனது கனவை ஒருபக்கம் வைத்துவிட்டு வேறு தொழிலில் சேர்ந்து குடும்பத்தை கவனித்து வந்துள்ளார்.
காலப்போக்கில் பகல் முழுவதும் popcorn விற்பனையில் ஈடுபடும் பயாஸ், இரவு நேரங்களில் காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்த இரண்டு வேலைகள் மூலம் கிடைக்கும் பணத்தின் மூலமே ஐந்து உடன்பிறப்புகளை கவனித்து வந்துள்ளார். குடும்பத்தை மிகுந்த சிரமத்தின் மத்தியில் கவனித்து வந்தாலும் அவரால் தமது விமானப் படையில் சேரும் கனவை புறம் தள்ள முடியவில்லை. இந்நிலையில் அவரே சொந்தமாக ஒரு விமானத்தை உருவாக்குவது என முடிவெடுத்தார்.
தொடர்ந்து இணையதளங்கள், புத்தகங்கள் மூலம் விமான கட்டமைப்பு குறித்து அறிந்துகொள்ள ஆரம்பித்தார். பின்னர் தான் சேமித்து வைத்திருந்த 50,000 ரூபாய், வங்கி கடன் 50,000 ரூபாய் என 1 லட்சம் ரூபாயில் தனது கனவு விமானத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். தனக்கு கிடைத்த விலைமலிவான பொருட்களை வைத்து பல நாட்கள் கடின உழைப்பிற்கு பின்னர் தனது கனவு விமானத்தை உருவாக்கினார் பயாஸ்.
பாகிஸ்தானின் குடியரசு தினம் கடந்த மார்ச் 23-ந் திகதி கொண்டாடப்பட்டது. அறைய நாளில் பல மக்கள் முன்னிலையில் இந்த விமானத்தை அவர் சோதிக்க முயன்றார். ஆனால் அதற்கு முன் காவல்துறையினர் அவரை கைது செய்து, விமானத்தை கைப்பற்றினர். மேலும் அவருக்கு 3,000 ரூபாவை அபராதமும் விதித்தனர். பின்னர் நல்லெண்ண அடிப்படியில் அவர் விடுவிக்கப்பட்டார். அதன்பின் அந்த செய்திகள் ஊடகங்களில் வெளியான பின்னர் இவர் உலகம் முழுவதும் பிரபலமானார். இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து பாகிஸ்தான் விமானப்படை அதிகாரிகள் 2 முறை, பயாஸின் வீட்டுக்கு சென்று, அவரது விமானத்தை ஆய்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

0 comments: