Sunday, May 5, 2019

பாலத்திற்கு கீழ் இருந்து துப்பாக்கி மற்றும் கூரிய ஆயுதங்கள் மீட்பு


முந்தல் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மதுரங்குளி கணமூலை – 10ஆம் கட்டை வீதியின் மந்தமான்தீவு பாலத்திற்கு கீழ் இருந்து துப்பாக்கி மற்றும் கூரிய ஆயுதங்கள் உள்ளிட்ட சில இலத்திரனியல் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 

குறித்த பாலத்திற்கு கீழ் சந்தேசத்திற்கிடமான பொருட்கள் கிடப்பதாக தனக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றினை அடுத்து, அந்த பாலத்தின் கீழ் விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார். 

நேற்று (04) மாலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது கூரிய வாள் இரண்டு, கத்தி 10, உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, ரவுட்டர் 3 உள்ளிட்ட சில இலத்திரனியல் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இதனையடுத்து, குறித்த பாலத்திற்கு கீழ் இன்னும் சில பொருட்கள் வீசப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தினை அடுத்து, இன்று (05) காலை கற்பிட்டி கடற்படையினரின் உதவியுடன் விஷேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. 

சுமார் மூன்று மணித்தியாலயங்கள் இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, கடற்படையினரின் இரண்டு சுழியோடி வீரர்கள் இந்த தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இவ்வாறு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது அந்த பாலத்திற்கு அருகில் கடற்படை மற்றும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

இன்று மேற்கொண்ட விஷேட தேடுதலின் போது, நான்கு கையடக்கத் தொலைபேசிகள், கத்தி 15, வாள் இரண்டு, வாகன இலக்கத் தகடு இரண்டு, தோட்டாக்கள் 24, தொலைக்காட்டி ஒன்று உள்ளிட்ட சில இலத்திரனியல் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. 

அண்மையில் கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பை அடுத்து, நாடு முழுவதும் விஷேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், முந்தல் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதிகளிலும் இராணுவத்தினரின் உதவியுடன் விஷேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை நடவடிக்கைகளுக்கு அச்சமடைந்தே, சந்தேக நபர்கள் இவ்வாறு கூரிய ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களை குறித்த பாலத்திற்குள் வீசிவிட்டுச் சென்றிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக முந்தல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார். 

இதுதொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

(புத்தளம் நிருபர் ரஸ்மின்)

Author: verified_user

0 comments: