பயங்கரவாதத்துக்கு துணைபோன விவகாரம் குறித்து ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக தம்மிடம் பல்வேறு ஆதாரங்கள் காணப்படுவதாகவும் அவற்றை நாளை மறு தினம் CID பிரிவிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும், இதனால் ரிஷாட் பதியுதீன் தொடர்பான பல்வேறு விடயங்கள் வெளியுலகுக்கு தெரியவருமென்று தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஹம்மட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில்:-
இந்த அமைச்சர்கள், தமது தனிப்பட்ட தேவைகளுக்காகவே இன்று தங்களது பதவிகளிலுருந்து ராஜினாமா செய்து கொண்டுள்ளனர். இதனை தற்போது அனைத்து முஸ்லிம்களுக்காக மேற்கொண்டதாக அவர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு எதிராகவும் குற்றங்கள் முன்வைக்கப்படவில்லை. மாறாக ரிஷாட் பதியுதீன், ஹிஸ்புல்லாஹ், ஆசாத் சாலி, முஜிபுர் ரஹ்மான் போன்றோர் மீதே குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ரிஷாட் பதியுதீன் மீது படிந்த ரத்தக்கறையை, ஒட்டுமொத்த முஸ்லிம்களின் மீதும் பூசும் வகையில்தான் முஸ்லிம் பிரதிநிதிகள் ராஜினாமா செய்துள்ளனர்.
இதனை சிந்தித்துப் பார்க்க வேண்டும். ரவூப் ஹக்கீமுக்கு ராஜினாமா செய்ய வேண்டிய தேவை ஏன் உள்ளது?
அதாவது, அரசியலில் அவர் அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டுமெனில், இனவாத சக்தியொன்று அவசியமாகும். இதற்காகவே, அவர் ராஜினாமா செய்து கொண்டுள்ளார்.
இது ஒரு அரசியல் விளையாட்டாகவே கருதப்படுகிறது. முஸ்லிம்களுக்கு இதனால் ஏற்பட்டுள்ள அவப்பெயருக்கு ராஜினாமா செய்த அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளும் பதில் கூறவேண்டும்.
ரிஷாட் பதியுதீன் நல்லவர் போல கருத்து வெளியிடுகிறார். இவருக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பான தகவல்கள் எம்மிடம் உள்ளன.
அந்தவகையில், நாளை மறுதினம் எமக்குக் கிடைத்த இந்தத் தகவல்களை CID பிரிவிடம் ஒப்படைக்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். அப்போது அனைத்து விடயங்களும் வெளிவரும் என்றார்.
பயங்கரவாதத்தைப் பாதுகாக்க அவர் எவ்வாறு செயற்பட்டார் என்பதெல்லாம் மக்கள் அதன்பின்னர் அறிந்துகொள்வார்கள்” என அவர் தெரிவித்தார்.

0 comments: