Friday, May 10, 2019

சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்காக DNA அறிக்கை


கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்டவரின் சகோதரர் உட்பட சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்காக DNA அறிக்கை பெறப்பட்டுள்ளதாக இரகசியப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். 

கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இரகசியப் பொலிஸார் இதனை குறிப்பிட்டனர். 

இதேவேளை, தாக்குதல் மேற்கொண்டவரின் சகோதரர் உட்பட சந்தேக நபர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் லங்கா ஜயரத்ன இரகசிய பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார். 

90 நாள் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவிற்கு அமைய குறித்த சந்தேக நபர்கள் மூவரும் பொலிஸாரின் பொறுப்பில் விசாரணை செய்யப்படுவதாக பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். 

தேசிய தௌஹீத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராஷீக்கிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு எதிர்வரும் ஜூலை மாதம் 25 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதவான் காஞ்சனா சில்வா கொழும்பு குற்றப் புலனாய்விற்கு அறிவித்தார். 

2016 ஆம் ஆண்டு மாளிகாவத்தைப் பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது பொதுபல சேன அமைப்பின் செயலாளர் சங்கைக்குரிய கலகொட அத்தேஞானசார தேரரை வசைபாடி இனங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக சந்தேக நபருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை அனைத்தும் சட்ட மா அதிபருக்கு அனுப்பியுள்ளதாக கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்திடம் தெரிவித்தது. 

எனினும், இதுவரை அது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கவில்லை எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.   

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Author: verified_user

0 comments: