நாடுமுழுவதும் உள்ள பாடசாலைகளில் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காக தற்போது விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது
எதிர்வரும் 6ஆம் திகதி இரண்டாம் தவணைக்கான பாடசாலை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது
இதற்கமைய நாட்டில் உள்ள பெரும்பாலான பாடசாலைகள் நேற்றைய தினம் இராணுவத்தினரின் ஊடாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
கொழும்பு ஆனந்தா கல்லூரி உட்பட சில பிரபல பாடசாலைகள் சோனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், இதன்போது கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமும் பங்கேற்றிருந்தார்.
இதன்போது கருத்து தெரிவித்து கல்வி அமைச்சர், பாதுகாப்புச் சபை, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை என்பன கலந்துரையாடி, பாதுகாப்பை உறுதிப்படுத்தியதன் பின்னரே எதிர்வரும் 6ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
இதேவேளை, பாடசாலைகளின் பாதுகாப்பு குறித்து, பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர, பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் விடயத்தில் முப்படையினரின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
காவல்துறை தலையைகத்தின் ஊடாக அனைத்து காவல்துறை நிலையங்களுக்கும் இது குறித்து அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், குறித்த பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு காவல்துறை நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், அதன் வளாகத்தில் வாகனங்களை நிறுத்திவைப்பதைத் தவிர்க்குமாறு காவல்துறை பேச்சாளர் கோரியுள்ளார்.
இதேவேளை, பாடசாலை பாதுகாப்பு குறித்து கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை குறித்து, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
குறித்த சுற்றறிக்கையில், மாணவர்களின் பாதுகாப்பிற்கான பொறுப்பை அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை தரப்பினர் ஏற்றுக்கொள்ள எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சரத்தை நீக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளரிடம் எழுத்துமூலம் கோரப்பட்டுள்ளது.
எனினும், அதில் மாற்றங்களை ஏற்படுத்த இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.

0 comments: