Thursday, May 23, 2019

ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டார் - உறுதியனது


வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொதுபலசேனாவின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், சற்று முன்னர் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார்.

அவர் வெலிக்கடை சிறையில் இருந்து வெளியேறி, கோட்டே, சிறி கல்யாணி சாமசிறி தர்ம மஹா சங்க சபை மஹாநாயக்கர் இத்தேபானே தம்மாலங்கார தேரரை சந்திப்பதற்காக சென்றுள்ளார்.

கடந்த 9 மாதங்களும் 15 நாட்களும் சிறையில் இருந்த அவர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொடவை நீதிமன்றில் வைத்து அச்சுறுத்தியமைக்காகவும், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டிலும் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
 
இதன்போது, 19 வருட கடூழிய சிறைத்தண்டனை ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டிருந்த நிலையில் , அதனை 6 வரு­டங்­களில் அனு­ப­விக்­கவும் நீதி­மன்றம் உத்­த­ரவிட்டிருந்தது.

இந்நிலையில் , ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் ஞான சார தேரரை விடுதலை செய்வதற்கான ஜனாதிபதியின் கைச்சாத்துடன் கூடிய உத்தரவு இன்று பிற்பகல் தனக்கு கிடைத்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்திருந்தார்.

அதன்படி , ஞானசார தேரர் இன்று பிற்பகல் 5 மணியளவில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் பாதுகாப்பு கருதி சிறைச்சாலை வளாகத்தில் இருந்து அவர் வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஞானசார தேரரின் விடுதலையை எதிர்ப்பார்த்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இன்று முற்பகல் தொடக்கம் வெலிகடை சிறைச்சாலை வளாகத்தில் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: