இந்திய லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியை தாம் பொறுப்பேற்றுக் கொள்வதாக அதன் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிதான் என்பதை இந்திய பொதுமக்கள் தீர்மானித்துள்ளனர்.
வெற்றிப்பெற்ற நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களைக் கூறிக்கொள்வதாகவும், தோல்வி குறித்து வேறெதனையும் கூற விரும்பவில்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த தேர்தலில் 300க்கும் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றிய பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி தெளிவான பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது.
இந்த தேர்தல் மோடி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக மக்களது கருத்துக் கணிப்பாகவே பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 90 கோடி மக்கள் இந்த தேர்தலில் வாக்களித்திருந்தனர்.
2000க்கும் அதிகமான கட்சிகளின் 8000க்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர்.
இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி மொத்தமாக 343 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
கடந்த தேர்தலில் பெற்ற மொத்த ஆசனங்களைக் காட்டிலும் 9 ஆசனங்களை குறைவடைந்துள்ளது.
காங்கிரஸ் கூட்டணி கடந்த தேர்தலை விட 25 ஆசனங்கள் அதிகமாக பெற்று, 90 ஆசனங்களை இந்த முறை பெற்றுள்ளது.
ஏனைய கட்சிகள் 108 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி 36 ஆசனங்களையும், அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.
ஏனைய கட்சிகள் எந்த ஆசனங்களையும் பெறவில்லை.
இதேவேளை , இந்திய பொதுத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
தங்களது ட்விட்டர் தளங்களின் ஊடாக அவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், மோடியுடன் தொடர்ந்து இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாகவும், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.

0 comments: