Thursday, May 23, 2019

தற்கொலை குண்டுதாரியின் சகோதரர்கள் நீதிமன்றில் முன்னிலை!


கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய அலாவுதீன் அஹமட் முவாத்தின் கைது செய்யப்பட்ட இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது அவர்களை மேலதிக பரிசீலனைக்காக இந்த மாதம் 27ம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டது.

இதேவேளை, அவர்கள் தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் சந்தேகநபர்கள் என்ற அடிப்படையில், பாதுகாப்பு அமைச்சிடம் பெறப்பட்ட தடுத்து வைக்கும் உத்தரவுக்கு அமைய அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இதேவேளை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த மேலும் இரண்டு பேரின் சடலங்கள் தொடர்பான மரணப்பரிசோதனைக்கான சாட்சி விசாரணை இன்று நடைபெற்றது.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இந்த நடவடிக்கைகள் இடம்பெற்றன.

இதன்பின்னர், குறித்த சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டன.

இதேவேளை, மினுவாங்கொடையில் நடைபெற்ற வன்முறைகள் தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோரி, பிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித்தலைவர் மதுமாதவ அரவிந்த இன்று உயர்நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

Author: verified_user

0 comments: