காத்தான்குடியில் இருக்கும் பிரபல அரசியல்வாதியின் தலைமையில் இயங்கிய ஆயுதக் குழுவினால் கடந்த காலங்களில் காணாமலாக்கப்பட்டோரில் பலர் கொல்லப்பட்டு மட்டக்களப்பில் புதைக்கப்பட்டிருக்கின்றார்கள். குறித்த சடலங்கள் எங்கு புதைக்கப்பட்டுள்ளன என்பதை அடையாளப்படுத்துவதற்கான சாட்சியங்கள் எங்களிடம் இருக்கின்றது என்பதை கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதியிடம் தெரியப்படுத்தியிருக்கின்றோம் என மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் தெரிவித்தார்.
தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று நடைபெற்றது. அதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் காணாமல் போனவர்களுள் சுமார் 35 பேர் மட்டக்களப்பில் புதைக்கப்பட்டிருக்கின்றார்கள். காத்தான்குடியில் இருக்கின்ற பிரபல அரசியல்வாதியின் தலைமையில் இயங்கிய ஆயுதக் குழுவினால் இது மேற்கொள்ளப்பட்டுள்ளன.குறிப்பிடப்பட்ட சடலங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் நகர்ப்புறத்தை அண்டிய பல பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ளதற்கான தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக நாம் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதியைச் சந்தித்து அவரிடம் அந்தச் செய்தி தொடர்பில் தெரியப்படுத்தி இராணுவத் தளபதிக்கு தெரியப்படுத்துவதற்கான அறிக்கை ஒன்றினையும் வழங்கியிருக்கின்றோம்.
குறித்த சடலங்கள் எங்கு புதைக்கப்பட்டுள்ளன என்பதை அடையாளப்படுத்துவதற்கான சாட்சியங்கள் எங்களிடம் இருக்கின்றது என்பதை மிகவும் தெளிவாக அவரிடம் கூறியிருக்கின்றோம். இராணுவத்தின் மீது நம்பிக்கை வைத்து நாங்கள் இந்தத் தகவலை வழங்கியிருக்கின்றோம். சம்பந்தப்பட்ட இடங்களை அகழ்ந்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டால் பல உண்மைகள் வெளிவரும். மட்டக்களப்பு மாவட்டத்தின் மிக முக்கியமான பிரபலங்கள் அரசியல் காரணங்களுக்காக அன்றி பொருளாதார மற்றும் தொழில் போட்டி காரணமாகவும் காணாமல் போயிருக்கின்றனர். எனவே எங்களது சாட்சியத்தைக் கொண்டு உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன்வைத்திருக்கின்றோம்.
சாட்சியங்களின் பாதுகாப்பு காரணமாக குறிப்பிட்ட இடங்கள் சாட்சியங்களின் விபரங்கள் தொடர்பில் தற்போது ஊடகங்களுக்கு வெளிப்படுத்த முடியவில்லை. ஆனால் இவ்விடயம் மூடிமறைக்கப்படக் கூடாது என்பதற்காகவே ஊடகங்களுக்குத் தெரியப்படுத்துகின்றோம்.
தற்போது காத்தான்குடியில் ஆயுதக் குழுக்கள் இயங்கியமை தொடர்பில் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு முன்னரும் பல தடவைகள் காத்தான்குடியில் ஆயுதக் குழுக்கள், இருக்கின்றனர். என்பது பற்றி பலரும் தெரிவித்திருந்தார்கள். கிழக்கு ஆளுநரிடம் ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி மட்டக்களப்பு சிறைச்சாலையில்கூட ஒருவர் உண்ணாவிரதம் இருந்திருந்தார். ஆனால் இவ்விடயங்கள் அந்நேரத்தில் கண்டுகொள்ளப்படவில்லை.
பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட குண்டுதாரிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஒரு அரசியல்வாதியின் வேண்டுதலின் பிரகாரம் விடுதலை செய்யப்பட்டதாகப் பல அமைச்சர்கள் கூறியிருக்கின்றார்கள். இன்று கூட தற்கொலைதாரி இவர் தான் என அறியப்படாமல் இருந்திருந்தால் தற்போது அவர் குண்டுடன் கைது செய்யப்பட்டிருந்தாலும் விடுதலையாகியிருப்பார். அந்தளவுக்கு அரசியல் பலம் இருக்கின்றது.
நாங்கள் முன்னெடுக்கும் விடயங்கள் அரசாங்கத்துக்குப் பாதகமாக இருக்குமாக இருந்தால் தற்போதும் இந்த அவசரகாலச் சட்டம் எங்கள் மீதும் பாயும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
இஸ்லாமிய அரசியல்வாதிகளின் நடவடிக்கையும், இஸ்லாமியப் பிரதேசங்களில் நடைபெறுகின்ற அபிவிருத்திகளையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கின்ற போது இவர்களுக்கு ஏராளமான நிதிகள் வெளிநாடுகளில் இருந்து வருகின்றது. ஆனால் அதற்கான கணக்கு வழக்குகள் எதுவும் இல்லை. தமிழ் மக்களில் சாதாரண ஒரு பயனாளியைத் தெரிவு செய்வதாக இருந்தால் கூட எவ்வளவு சிரமத்தின் மத்தியில் தெரிவு செய்யப்படுகின்றார்கள். ஆனால் முஸ்லிம்களுக்கு எந்தத் தகவல்களும் தேவையில்லை. ஒரு அமைச்சரோ அல்லது பாராளுமன்ற உறுப்பினரின் சிபாரிசில் வழங்கப்படுகின்றது.
மட்டக்களப்பு பல்கலைக்கழகம் என்பது ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் உருவாக்கப்படுகின்றது. கிழக்கு எல்லையாகக் கருதப்படும் ஒலுவில் பிரதேசத்தில் ஒரு பல்கலைக்கழகம் உள்ளது. மேற்கு எல்லையாகக் கருதப்படும் புனாணையில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கின்றார்கள். தெற்குப் பகுதியாகக் கருதும் புல்லுமலையில் தண்ணீர்த் தொழிற்சாலை அமைக்கின்றார்கள் என்கின்ற மூன்று விடயங்களையும் நாங்கள் முன்பு சுட்டிக்காட்டியிருந்தோம்.
முற்றுமுழுதாக அராபியக் கலாசாரத்தை வெளிப்படுத்துகின்ற பல்கலைக்கழகத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இது முற்றுமுழுதாக தவறான விடயம். ஏனெனில் இங்கு அரபு மாணவர்கள் எவரும் வந்து கல்வி கற்கப் போவதில்லை. இந்த நாட்டின் தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் தான் கல்வி கற்கப் போகின்றார்கள். இந்த அடிப்படையில் இந்த பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நுழையும்போது தாங்கள் ஒரு அராபியக் கலாசாரத்துக்குள் நுழைவது போன்ற தோற்றப்பாடு நிச்சயமாக மாணவர்கள் மனதில் பதியப்படும். இது எதிர்கால மாணவர் சமுதாயத்துக்கு சிறந்த விடயமல்ல என்றும் தெரிவித்தார்.

0 comments: