Wednesday, May 8, 2019

கஞ்சிபாண இம்றான் மீது 27 குற்றச்சாட்டுகள்!


பாதாள உலகக் குழுத் தலைவரான கஞ்சிபாண இம்றான் என அறியப்படும் மொஹமட் நஜீம் மொஹொமட் இம்றான் மீது, மனிதப் படுகொலை, மனிதப் படுகொலைக்காக சூழ்ச்சி செய்தமை மற்றும் ஒத்துழைத்தமை உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுகள் உள்ளதாக, கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு இன்று நீதிமன்றில் அறிவித்துள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனா முன்னிலையில் இன்று அவர் பிரசன்னப்படுத்தப்பட்ட போது இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவுக்கு அமைய, கஞ்சிபாண இம்றான் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார்.

இந்த நிலையில், கண்காணிப்புக்காக அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கடந்த மாதம் 30ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய, அவர் இன்றைய தினம் நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.

இதன்போது, பாதாள உலகக் குழுத் தலைவரான மாகந்துரே மதூஷினால் டுபாயில் நடத்தப்பட்ட விருந்துபசாரத்தில் வைத்து கஞ்சிபாண இம்றானுடன் கைதுசெய்யப்பட்ட அவரது உதவியாளர்கள் இருவரும், கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அவர்கள் இருவரும் குறித்த குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கஞ்சிபாண இம்றான் மற்றும் அவரின் உதவியாளர்கள் இருவரையும் ஜுன் மாதம் 12 ஆம் திகதி கண்காணிப்புக்காக மன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Author: verified_user

0 comments: