மருத்துவர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சினால் விசேட விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்து சேகரித்தமை தொடர்பில் குருணாகலை போதனா மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் பிரிவில் சேவையாற்றும் மருத்துவரான இந்த மருத்துவர் தற்போதைய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிசேரியன் சத்திர சிகிச்சை மூலம் தாய்மார்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்ததாக மேற்படி மருத்துவர் மீதே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த மருத்துவருக்கு எதிராக இதுவரையில் 15 பெண்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
அவற்றுள் 5 முறைப்பாடுகள் நேற்றைய தினம் பதிவு செய்யப்பட்டிருந்தன.
முறைப்பாடுகளை தெரிவித்துள்ள அனைத்து பெண்களிடமும் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக, குருநாகல் மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் வீரபண்டார எமது செய்தி பிரிவிடம் தெரிவித்துள்ளார்.
சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்து சேகரித்தமை தொடர்பில், சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி கடந்த 24ம் திகதி குருநாகலில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பின்னர் குறித்த மருத்துவர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
42 வயதுடைய குறித்த மருத்துவர் 13 வருடங்களுக்கும் அதிக காலம், மகப்பேறு மற்றும் நரம்பியல் மருத்துவராக கடமையாற்றியுள்ளதாக இதுவரையில் தெரியவந்துள்ளது.
அவருக்கு எதிராக இன்று 10 முறைப்பாடுகள் பதிவானதுடன், மேலும் சிலரும் முறைப்பாடுகளை முன்வைக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாக குழு தற்போது கூடியுள்ளது.
அந்த சங்கத்தின் தலைமையகத்தில் இடம்பெறும் இந்த நிர்வாக குழு கூட்டத்தின் போது, குருநாகல் மருத்துவர் தொடர்பில் தீர்மானம் ஒன்று எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சுமத்தப்பட்டுள்ள மருத்துவர் தொடர்பில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், ஹரேந்த டி சில்வா, அரச மருத்துவ அதிகரிகள் சங்கத்துடன் ஏற்கனவே கூட்டம் ஒன்றை நடத்தியதாக, அந்த சங்கத்தின் உறுப்பினர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
இதன்போது, குறித்த மருத்துவரினால் பாதிப்படைந்துள்ளவர்கள் சத்திய வாக்குமூலம் ஒன்றை மருத்துவ சபைக்கு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0 comments: