மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் விளக்கங்களை கோருவதற்காக 4 அரச நிறுவனங்களின் பிரதானிகள், இன்று பிற்பகல் நாடாளுமன்றில் கூடவுள்ள கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
கல்வி, தொழிற்பயிற்சி அமைச்சுகள், இலங்கை முதலீட்டு சபை மற்றும் பல்கலைகழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு ஆகியவற்றின் பிரதானிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பல்கலைக்கழகமாக அழைக்கப்படும் நிறுவகம் பல்கலைக்கழகமா? அல்லது தொழிற்பயிற்சி மத்திய நிலையமா? என்பது தொடர்பில் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கான பணத்தை முதலீடு செய்துள்ளது யார்?, அதில் கற்பிக்க தீர்மானிக்கப்பட்ட பாடநெறிகள் எவை? என்பன தொடர்பில் இன்று கூடவுள்ள கோப் குழு கூட்டத்தின் போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இன்று முற்பகல் 11.00 மணியளவில் சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இதன்போது, அமைச்சர் றிசாட் பதியூதீனுக்கு எதிராக எதிர்கட்சிகளினால் முன்வைக்கப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணை குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.
அத்துடன் ஜே.வீ.பி, அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரவுள்ள அவநம்பிக்கை பிரேரணை இன்று நாடாளுமன்றில் வைத்து சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.
இன்று பிற்பகல் ஒரு மணியளவில் நாடாளுமன்றம் கூடிய பின்னர் இந்த பிரேரணை கையளிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று முற்பகல் 11.30 அளவில் ஐக்கிய தேசிய கட்சியின் குழுக் கூட்டம் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

0 comments: