கிழக்கு மாகாண சபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவுக்கு கடந்த 10 மற்றும் 16 ஆம் திகதிகளில் எழுதிய கடிதங்களின் பிரதிகளையும் எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
1981 ஆம் ஆண்டுகளில் கிழக்கு மாகாணத்தின் இன விகிதாசாரமானது தமிழர்கள் 42 சதவீதமாகவும், முஸ்லிம்கள் 32 சதவீதமாகவும், சிங்களவர்கள் 26 சதவீதமாகவும் இருந்தது.
1983 ஆம் ஆண்டு கலவரத்தின் பின்னர் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் தற்போதுதான் தமது வாழ்விடங்களிற்கு திரும்பிவருகிறார்கள்.
இந்த நிலையில், முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வுக்காக முஸ்லிம் 25 சதவீதமாகவும், தமிழர்கள் 10 சதவீதமாகவும், சிங்களவர்கள் 40 சதவீதமாகவும் அழைக்கப்பட்டுள்ளனர் என்பதனை விண்ணப்பதாரிகள் தமது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இது அநீதியானது எனத் தெரிவித்துள்ள அவர், நீதியை நிலைநாட்டும் முகமாக பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இத்தகைய அநீதியான நடவடிக்கைகளானது நல்லிணக்கதிற்கு மிகபாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனை ஜனாதிபதியாகிய தாங்கள் அறிவீர்கள் என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

0 comments: