கண்டியிலும், அம்பாறையிலும் நடைபெற்ற இனக் கலவரங்களால் சிங்கள மக்கள் கவலைப்படுகிறார்கள் என்பதில் எந்த உண்மையும் இல்லை. அதற்கு மாறாக சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களால் அவர்கள் சந்தோசப்படுகின்றார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இன ஒற்றுமை என்ற தலைப்பில் கடந்த சனிக்கிழமை கொழும்பில் நடந்த கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
1983ஆம் ஆண்டில் தமிழ் மக்கள் தாக்கப்பட்ட சந்தர்பத்திலும் சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சில ஆண்டுகளுக்குப் பின்னரே அதையிட்டுக் கவலைப்பட்டனர். அரபிய கலாசாரத்தை இலங்கை முஸ்லிம்கள் பின்பற்றுவதால் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சமுதாயத்துக்குள் அவர்கள் தள்ளப்படுகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
முஸ்லிம்களால் நடத்தப்படும் சிறு பாடசாலைகளுக்கே முஸ்லிம் பெண் பிள்ளைகள் செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிலோ உலகத்திலோ கலப்பின்றி தனியாக எந்தவொரு சமூகமும் இல்லையென்பதை சிங்களவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். கஜபா அரசனால் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட 14 ஆயிரம் பேரில் ஒருவராவது இங்குள்ள ஒருவரின் அப்பாவாக இல்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
முஸ்லிம்களை மரக்கலையா அல்லது ஹம்பையா என அழைப்பதற்குக் காரணம் அது அவர்கள் பயணம் செய்து இலங்கைக்கு வந்த இரு கப்பல்களின் பெயர்களே தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை. அப்படியானால் விஜயமன்னன் கூட அப்படியொரு மரக்கலத்தில் வந்தவர்தான் என்றும் குறிப்பிட்டார்.
முஸ்லிம்களால் நடத்தப்படும் நிறுவனத்தில் ஒரு பௌத்த மதகுருவை கற்பிக்க அனுமதிப்பீர்களா என்றும் முஸ்லிம்களிடம் மகிந்த தேசப்பிரிய கேல்வி விடுத்தார்.

0 comments: